< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் அந்தமான் விமானம் ரத்து; பயணிகள் வாக்குவாதம்
சென்னை
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் அந்தமான் விமானம் ரத்து; பயணிகள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
25 Jun 2023 3:06 PM IST

சென்னை விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் அந்தமான் செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொழில்நுட்ப கோளாறு

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை அந்தமானுக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய இருந்த 146 பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்து விட்டு விமானத்தில் ஏற தயாராக காத்து இருந்தனர். விமானத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்பு, விமானி எந்திரங்களை சரி பார்த்தார். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை கண்ட விமானி, பயணிகளை விமானத்தில் ஏற்றாமல் தொழில் நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விமானம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

விமானம் ரத்து

விமான என்ஜினீயர்கள், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய முடியவில்லை. இதனால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன கவுண்ட்டரை சூழ்ந்து கொண்டு அங்கிருந்த விமான நிறுவன அதிகாரிகள், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு முன்னதாகவே வந்து காத்து இருக்கிறோம். 4 மணி நேர தாமதம் என கூறிவிட்டு, தற்போது விமானம் ரத்து என கூறுவதா? என கேட்டனர். விமான நிறுவன அதிகாரிகளும், பாதுகாப்பு படையினரும் பயணிகளை சமாதானம் செய்தனர்.

பயணிகள் அவதி

விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கும்போது விமானத்தை இயக்குவது பாதுகாப்பானது இல்லை என்பதால் விமான பயணத்தை ரத்து செய்து உள்ளோம் என்றனர். இதையடுத்து சில பயணிகள் விமான டிக்கெட்டை வேறு விமானத்துக்கு மாற்றி பயணம் செய்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்துக்கு லண்டனில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு வந்துவிட்டு மீண்டும் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக தாமதமாக சென்னை வந்து சேரும் எனவும், இதனால் 6 மணிநேரம் தாமதமாக விமானம் புறப்பட்டு செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் லண்டன் செல்ல காத்திருந்த 328 பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

மேலும் செய்திகள்