ராமநாதபுரம்
அனுமதிபெறாமல் பிளக்ஸ், பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை
|திருவாடானை தாலுகாவில் அரசு அனுமதி பெறாமல் பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் செந்தில் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் அரசு அனுமதி பெறாமல் பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் செந்தில் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இடையூறு
இதுகுறித்து தாசில்தார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- அரசு அனுமதி பெறாமல் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் வைப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.
ஆனால் திருவாடானை தாலுகாவில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் பல்வேறு சமூக நல அமைப்புகள் வணிக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் பொது பயன்பாட்டிற்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை வைத்து வருகின்றனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அரசின் அனுமதி பெறாமலும் பிளக்ஸ் போர்டுகள் பேனர்கள் வைத்துள்ள நபர்கள் உடனடியாக தாமாக முன்வந்து அவற்றை அகற்றிக் கொள்ள வேண்டும்.
அனுமதி
மேலும் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் காவல் துறை அனுமதி பெற்ற பின்னரே பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதிக்கப்படும். மீறி அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் வைத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.