< Back
மாநில செய்திகள்
தொரடிப்பட்டு மணலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தொரடிப்பட்டு மணலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
5 Aug 2022 10:17 PM IST

கல்வராயன்மலை தொரடிப்பட்டு மணலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது

கச்சிராயப்பாளையம்

தொடர் மழை

கல்வராயன்மலை பகுதியில் 175-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இங்கு கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வரும் தொடர் மழை காரணமாக தொரடிப்பட்டு மணலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் தொரடிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள எழுத்தூர், கெடார், பட்டிவளவு, கிணத்தூர், விளாம்பட்டி, சின்னதிருப்பதி, மேல்பாச்சேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

ஆனாலும் இடுப்பளவில் கரைபுரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளத்தை கண்டு அச்சம் அடையாத அப்பகுதி மக்கள் ஆற்றில் ஒரு கரையில் இருந்து இன்னொரு கரைக்கு வெள்ளத்தில் மிதந்தபடி கடந்து சென்று வருகின்றனர். அது மட்டுமின்றி தாங்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களையும் பொதுமக்கள் உதவியுடன் தூக்கி சென்ற பரிதாப காட்சியையும் காண முடிந்தது. இது பற்றி மலைவாழ் மக்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும்

ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் தொரடிப்பட்டு மணலாற்றில் அதிக அளவில் தண்ணீர் வரும்போது தரை பாலம் வெள்ளத்தில் மூழ்கி விடும். இதனால் கிராமங்களுக்கு செல்ல போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதனால் பிற கிராமங்கள் மற்றும் நகர்புறங்களுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வர முடியாமல் கடும் அவதி அடைந்து வருகிறோம். தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தை கடந்து சென்று வருகிறோம்.

மேம்பாலம் கட்டித்தர வேண்டும்

எங்களின் ஆபத்தான நிலையை கருத்தில் கொண்டு மணலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இதுவரை அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் ஓட்டு வேட்டைக்காக எங்களை நாடி வரும் அரசியல் கட்சியினர் இந்த கோரிக்கைக்காக குரல் கொடுக்க வேண்டும். எங்களுக்கு மேம்பாலம் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்