< Back
மாநில செய்திகள்
குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு
தென்காசி
மாநில செய்திகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு

தினத்தந்தி
|
20 Jun 2023 12:15 AM IST

குற்றாலத்தில் குளுகுளு சீசன் தொடங்கியது. அங்குள்ள அருவிகளில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். அப்போது இங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காலநிலை நிலவும். இந்த சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலா பயணிகளும் குற்றாலத்துக்கு வருவார்கள். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து செல்வார்கள்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் பிறந்து 2 வாரங்களை கடந்த நிலையிலும் சீசன் தொடங்காமல் தாமதமாகி வந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். குளுகுளு சீசன் எப்போது தொடங்கும், அதை ஆனந்தமாக அனுபவிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தற்போது சீசன் தொடங்கி உள்ளது. நேற்று காலையில் இருந்தே குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீசியது. சாரல் மழையும் விட்டு விட்டு பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மாலையில் தொடர்ந்து சாரல் மழை பொழிந்தது.

இதனால் மாலை சுமார் 6 மணிக்கு குற்றாலம் ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் குளிப்பது ஆபத்து என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். அதைத் தொடர்ந்து இரவு 7-30 மணிக்கு மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு மின்தடையும் ஏற்பட்டது. இதனால் அங்கு குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்வதால் குற்றாலத்திலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து சீசன் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்