திருப்பூர்
திருப்பூரில் இரவு, பகலாக தேசிய கொடி தயாரிப்பு
|திருப்பூரில் இரவு, பகலாக தேசிய கொடி தயாரிப்பு பணி நடந்து வருகிறது
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழாவை எழுச்சியாக கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நாட்டுமக்களும் தயாராகி விட்டனர். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் பட்டொளி வீசி பறக்க தேவையான தேசிய கொடி தயாரிக்கும் பணி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில் பனியன் ஆடைகள் தயாரித்து மனிதர்களின் மானத்தை காக்கும் நமது டாலர் சிட்டிக்கு, தேசப்பற்றை காப்பதற்கான தேசிய கொடி தயாரிக்கும் வாய்ப்பும் நாடு முழுவதும் இருந்து வந்திருப்பது பெருமை தரும் விஷயமாக உள்ளது.
பொதுமக்கள் ஆர்வம்
கொரோனாவின் கொடூர தாக்கம் கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதுமட்டுமின்றி, பலரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்ட காரணத்தாலும், கொரோனா கட்டுப்பாடுகளாலும் பொதுமக்களால் சுதந்திர தின விழாவை பெரிய அளவில் கொண்டாட முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது 75-வது சுதந்திர தின விழா வருவதால் சுதந்திர தின விழாவை எழுச்சியாக கொண்டாட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளும்பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன.நாைள (சனிக்கிழமை) முதல் 15-ந்தேதி வரை சுதந்திர தின விழாவை கொண்டாட அரசு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பொதுமக்கள் வீடுகள் தோறும் கொடியேற்றவும், சமூக வலைதள செயல்பாடுகளில் ஒவ்வொருவரும் தேசிய கொடி படத்தை வைக்கவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் பலரும் தங்களின் முகநூல், வாட்ஸ்-அப் பக்கங்களில் தேசியக்கொடி படத்தை வைத்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, கடந்த காலங்களில் தேசியக்கொடி தயாரிப்பு மற்றும் தேசியக்கொடி ஏற்றுதல் உள்ளிட்டவற்றுக்கு இருந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளைஅரசு அறிவித்துள்ளதால் இந்த ஆண்டு தேசியக்கொடியின் தேவை அதிகரித்துள்ளது.
இரவு, பகலாக தயாரிப்பு
திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கும், கொடி தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் தேசிய கொடி தயாரிப்புக்கான ஆர்டர்கள் அதிக அளவில் வந்துள்ளன. இதன் காரணமாக திருப்பூரில் உள்ள கொடி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பல பனியன் நிறுவனங்களில் தற்போது தேசியக்கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் என அனைத்து தரப்பட்ட இடங்களிலும் வருகிற 13-ந்தேதி முதல் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் தேசியக்கொடி தயாரிப்புக்கான கால அவகாசம் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் திருப்பூரில் தற்போது இரவு பகலாக தேசிய கொடி தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. சில நிறுவனங்கள் கொடி தயாரிப்பு பணியை முடித்து உரியவர்களுக்கு கொடியை அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இதேபோல் உள்ளூரில் உள்ள கடைகள், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்புகளுக்கு தேவையான கொடிகள் தயாரிக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. பனியன் ஆடை தயாரிப்பில் பரபரப்பாக இருந்த திருப்பூர் தற்போது தேசிய கொடி தயாரிப்பில் மும்முரமாகியுள்ளது.
40 லட்சம் கொடி
திருப்பூரில் சிறிய அளவு முதல் பெரிய அளவிலான தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 16-க்கு 20 இன்ச், 12-க்கு 18 இன்ச், 18-க்கு 27 இன்ச் என பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை குறைந்தபட்சம் ரூ.20 முதல் 30 ரூபாய் வரைக்கும் தயாரிக்கப்படுகின்றன. இதில் பாலியஸ்டர் கொடியை விட பருத்தி துணியால் தயாராகும் கொடிகளின் விலை அதிகமாக உள்ளது. இதேபோல் ஒரு சில நிறுவனங்களில் ஆர்டர்களுக்கு ஏற்றவாறு நீளமான கொடிகளும் தயாரிக்கப்படுகிறது. இதுவரை திருப்பூரில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான கொடிகள் தயாராகியுள்ளதாக பனியன் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். கொரோனாவின் மறைமுக பாதிப்பாக பனியன் வர்த்தகத்தில் சுணக்கம் இருந்த நிலையில்தற்போது கொடி தயாரிப்பு சூடு பிடித்திருப்பதால் பனியன் நிறுவனத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதேபோல் பனியன் நிறுவனங்கள் மட்டுமின்றி தபால் நிலையங்கள், மகளிர் சுய உதவிக்குழுவின் விற்பனை மையங்கள் மற்றும் ஒரு சில வங்கிகள் மற்றும் கடைகள், சாலையோர கடைகள் என பல இடங்களிலும் தேசியக்கொடி விற்பனை நடந்து வருவதால் திருப்பூரில் எங்கு பார்த்தாலும் மூவர்ணக்கொடி மயமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.