கோயம்புத்தூர்
மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் டாக்டர்கள் உள்பட 5 பேர் கைது
|கோவையில் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் டாக்டர்கள் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கோவை, ஜூன்.14-
கோவையில் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் டாக்டர்கள் உள்பட 5 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல்
கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் அருகே எல்லன் ஆஸ்பத்திரி என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் (வயது 75) உள்ளார். இவர் இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவருக்கு வாடகையாக கொடுத்தார். இதையடுத்து அந்த ஆஸ்பத்திரி பெயர் சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு 30 பேர் கொண்ட கும்பல் இந்த மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடி விட்டு ஊழியர்கள், டாக்டர்களை மிரட்டி விட்டு தப்பிச்சென்றது.
போலீசார் விசாரணை
இது தொடர்பாக டாக்டர் ராமச்சந்திரன் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். அதில் டாக்டர் உமாசங்கர் கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தினார் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, இந்த மருத்துவமனையை வாடகைக்கு எடுத்த டாக்டர் உமாசங்கர் தனக்கு ரூ.4 கோடியே 95 லட்சம் வாடகை தராமல் ஏமாற்றியதாகவும், ரூ.100 கோடி மதிப்புள்ள மருத்துவமனை யை உமாசங்கர் மற்றும் அவருடைய மேலாளர் மருதவான் ஆகியோர் விற்பனை செய்ய முயற்சி செய்வதாகவும் கோவை மாநகர குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் உமாசங்கர், மருதவான் ஆகியோரை கைது செய்தனர்.
5 பேர் கைது
இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எல்லன் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரான டாக்டர் ராமச்சந்திரன் உள்பட 5 பேர் தான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் ராமச்சந்திரன், காமராஜ் (49) மற்றும் ராமச்சந்திரனின் உதவியாளர் முருகேஷ் (47), மூர்த்தி (45), கார் டிரைவர் பழனிசாமி ஆகிய 5 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பொய் புகார் கொடுத்தல் உள்பட 9 பிரிவின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர் அவர்கள் 5 பேரையும் போலீசார் கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் 5 பேரையும் வருகிற 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.