பெரம்பலூர்
ராணுவத்திற்கு முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 16 மாவட்ட இளைஞர்களுக்கான உடற்தகுதி தேர்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள்
|ராணுவத்திற்கு முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பெரம்பலூரில் நேற்று தொடங்கியது.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் சிப்பாய் ஜெனரல் டியூட்டி, ஸ்டோர் கீப்பர்/ கிளார்க், டெக்னிக்கல், டிரேட்ஸ்மேன் ஆகிய பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான முதற்கட்ட தேர்வான கணினி அடிப்படையிலான எழுத்து தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது.
இதையடுத்து, முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற மேற்கண்ட 16 மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 600 இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.
726 பேர் பங்கேற்பு
முதல் நாளில் 826 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட இளைஞர்களில் 726 பேர் நேற்று முன்தினமே பெரம்பலூர் வந்து விளையாட்டு மைதானம் முன்பு காத்திருந்தனர். 100 இளைஞர்கள் வரவில்லை. வந்திருந்த இளைஞர்களை நள்ளிரவில் ராணுவ வீரர்கள் சோதனை செய்து, அனுமதி சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்த பின்னர் மைதானத்திற்குள் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேற்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கியது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு உதவி ராணுவ ஜெனரல் அதிகாரி பிரிகேடியர் எம்.எஸ்.பாகி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி ஆகியோர் முன்னிலையில் இளைஞர்களுக்கான 1,600 மீட்டர் ஓட்டத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இளைஞர்களுக்கு இந்த ஓட்டம் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது.
உடற்தகுதி தேர்வு
1,600 மீட்டர் ஓட்டத்தினை 5 நிமிடம் 30 வினாடிகளில் ஓடி முடித்த இளைஞர்களை குரூப்-1 கூண்டிலும், 5 நிமிடம் 45 வினாடிகளில் ஓடி முடித்த இளைஞர்களை குரூப்-2 கூண்டிலும் நிறுத்தி வைத்தனர். இதில் மொத்தம் 216 இளைஞர்கள் தேர்ச்சி பெற்றனர். மற்ற இளைஞர்கள் நிராகரிக்கப்பட்டு, மைதானத்தை விட்டு ராணுவ வீரர்களால் வெளியேற்றப்பட்டனர். ஓட்டம் ஓடிய போது கீழே விழுந்து காயமடைந்த இளைஞர்களை மருத்துவக்குழுவினர் உடனடியாக மீட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் ஓட்டத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது.அதனை தொடர்ந்து அவர்களுக்கு அடிப்படை உயர தேர்வு, மார்பளவு அளத்தல், புல்-அப்ஸ் எடுத்தல், நீளம் தாண்டுதல், இசட் வடிவிலான கம்பி மீது வேகமாக செல்வது என்பன உள்ளிட்ட உடற்தகுதி தேர்வுகள் நடந்தது. பயோ மெட்ரிக் முறையில் அவர்களது கைரேகைகள், அங்க அடையாளம் பதிவு செய்து உயரம், எடை பதிவு செய்யப்பட்டது. இதில் தேர்வானவர்களின் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்தும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு
உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முழுவதும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. ராணுவத்திற்கான உடற்தகுதி தேர்வு-சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளையொட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி, விளையாட்டு ஆயத்த பயிற்சிக்கும், இருசக்கர, இலகு ரக வாகனங்கள் செல்வதற்கும் தடை செய்யப்பட்டது. மைதானத்தில் ராணுவ வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலுவலர் டாக்டர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஆர்.டி.ஓ. நிறைமதி மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடக்கிறது. இந்த பணிகள் வருகிற 5-ந்தேதியுடன் நிறைவடைகிறது.