< Back
மாநில செய்திகள்
மீன்பிடி தடைகாலம் தொடங்கியது காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 விசைப்படகுகள் நிறுத்தம் -மீன் விலை உயர வாய்ப்பு
சென்னை
மாநில செய்திகள்

மீன்பிடி தடைகாலம் தொடங்கியது காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800 விசைப்படகுகள் நிறுத்தம் -மீன் விலை உயர வாய்ப்பு

தினத்தந்தி
|
15 April 2023 12:19 PM IST

மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால் மீன் விலை உயர வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த கால கட்டத்தில் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 60 நாட்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் 810-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற படகுகளும் கரைக்கு திரும்பி விட்டன. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் மீன் தேவையை காசிமேடு மீனவர்கள் நிவர்த்தி செய்து வருகின்றனர். தினமும் அதிகாலை 2 மணி முதல் பரபரப்பாக காணப்படும் காசிமேடு துறைமுகத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் மீன்களை மொத்தமாக வாங்கி செல்வார்கள். கூடை கூடையாக வந்து குவியும் பலவகை மீன்கள் ஏலத்தில் எடுத்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக விற்பார்கள்.

மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் இத்தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ள 15 ஆயிரம் தொழிலாளர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதவிர மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளும், அவர்களை சார்ந்த குடும்பத்தினரும் வருவாய் இழப்புக்கு ஆளாகிறார்கள்.


மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்கள், விசைப்படகுகளை பராமரிப்பது, அதில் உள்ள பழுதுகளை சரிபார்ப்பது வழக்கம். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்வரத்து படிப்படியாக குறையும். ஆழ்கடலில் பிடித்து வரப்படும் மீன்கள் 2 மாதத்துக்கு தமிழகத்தில் கிடைக்காது.

ஆனால் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் வழக்கம்போல் மார்க்கெட்டுகளுக்கு வரும். ஆனால் காசிமேடு மீன்கள் மட்டும் கிடைக்காது. அதே நேரத்தில் கடலின் மேல் பகுதியில் உள்ள மீன்களை சாதாரண சிறிய வகை பைபர் படகுகளில் காலை கடலுக்குள் சென்று மாலைக்குள் கரை திரும்பி விடவேண்டும். அதனால் கடலோரப் பகுதியில் உள்ளவர்கள் சிறிய படகுகளில் சென்று சிறு சிறு மீன்களை பிடித்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

மீன்பிடி தடைகாலம் தொடங்கி இருப்பதால் மீன் மார்க்கெட்டுக்கு பெரிய வகை மீன்கள் காசிமேடு மார்க்கெட்டுக்கு இனி வராது. இதனால் வரும் நாட்களில் மீன் விலை கடுமையாக உயரும். விரும்பிய மீன்களை வாங்க இயலாது. தெருக்களில் மீன் விற்கும் வியாபாரிகளும் குறைந்த அளவிலேயே மீன்களை விற்பனை செய்வார்கள்.

மேலும் செய்திகள்