< Back
மாநில செய்திகள்
கடல் சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

கடல் சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு

தினத்தந்தி
|
16 Sept 2023 12:15 AM IST

தொடரும் கடல் சீற்றத்தால் வாலிநோக்கம், ஏர்வாடி, பாம்பன் உள்ளிட்ட பல பகுதிகளில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

சாயல்குடி

தொடரும் கடல் சீற்றத்தால் வாலிநோக்கம், ஏர்வாடி, பாம்பன் உள்ளிட்ட பல பகுதிகளில் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றம்

ராமநாதபுரம் மாவட்டத்தின் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வீசி வரும் பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் மீன்பிடி தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதுடன் கடல் சீற்றமும் அதிகமாக உள்ளது.

இதனிடையே சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. கடல் அலையானது கடற்கரையை ஒட்டி உள்ள பாறைகளில் மீது மோதி பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக சீறி எழுந்தன.

மீன்பிடி தொழில் பாதிப்பு

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருவதால் வாலிநோக்கம், கீழமுந்தல், மேலமுந்தல், மூக்கையூர், ஏர்வாடி, கீழக்கரை, பாம்பன் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டு படகுகளில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் மீன்பிடி தொழிலும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தனுஷ்கோடி பகுதியிலும் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே உள்ளது. பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்