< Back
மாநில செய்திகள்
நரிக்குடி அருகே மீன்பிடி திருவிழா - 10 கிலோ வரை சிக்கிய மீன்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி
மாநில செய்திகள்

நரிக்குடி அருகே மீன்பிடி திருவிழா - 10 கிலோ வரை சிக்கிய மீன்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
11 July 2022 4:14 PM IST

நரிக்குடி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி பகுதியில் சென்ற ஆண்டு நல்ல மழை பெய்ததால் இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் முழுவதும் நிரம்பியது. இதனால் இந்த பகுதி முழுவதும் பல ஆண்டுகளுக்கு பிறகு நெல் விளைச்சல் அமோகமாக இருந்தது.

மேலும் கிருதுமால் நதியில் வைகை ஆறு தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் இந்தப் பகுதியில் 40-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பியது.

இந்த நிலையில் நரிக்குடி அருகேயுள்ள நாலூர் கிராமத்தில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சுமார் 350 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாலூர் பெரிய கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் நாலூர் காலணி, சீனிமடை,கிராமங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் போட்டி போட்டுக்கொண்டு கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்ட அனைவரது வலையிலும் சுமார் 10 முதல் 15 கிலோ வரையிலான கெண்டை,கெழுத்தி,விறால், சிலேபி, குறவை உட்பட பல்வேறு வகையிலான மீன்கள் பிடிபட்டது.

மேலும் நாலூர் கிராமத்தை சேர்ந்த பூமி மற்றும் சீனிமடை கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி, முத்து ஆகியோரது வலைகளில் 5 கிலோ எடை கொண்ட கட்லா கெண்டை சிக்கியதால் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்