< Back
மாநில செய்திகள்
ஏரியில் மீன்பிடி திருவிழா
திருச்சி
மாநில செய்திகள்

ஏரியில் மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
10 July 2022 9:20 PM GMT

ஆலத்துடையான்பட்டி ஏரியில் மீன்பிடி திருவிழா நடந்தது.

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரம் ஒன்றியம் ஆலத்துடையான்பட்டி வடக்கு பகுதியில் 218.86 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரிய ஏரியும், அதனையொட்டி 162.52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சின்ன ஏரியும் இரட்டை ஏரிகளாகும். மங்கியாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையே இரண்டு ஏரிகளையும் பிரிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையில் இருந்து வரும் அய்யாற்றை நீராதாரமாக கொண்ட இந்த ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து தடைபட்டதால், ஏரியின் நீர்மட்டம் மிகவும் குறைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை சின்ன ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுற்று வட்டாரத்தில் உள்ள கருப்பம்பட்டி, பி.மேட்டூர், கோட்டப்பாளையம், விஸ்வாம்பாள்சமுத்திரம், வலையப்பட்டி, மாராடி, சிறுநாவலூர், ரெட்டியாப்பட்டி, நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து அதிகாலை முதலே பொதுமக்கள் திரளாக வந்தனர். காலை 7.30 மணியளவில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீன்பிடி வலைகள், சாக்குப்பைகள் போன்ற உபகரணங்களுடன் உற்சாகமாக கோஷமெழுப்பியபடி பொதுமக்கள் சின்ன ஏரியில் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் பெரிய அளவிலான மீன்கள் பிடிபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பிடிபட்ட மீன்களை சாக்குகளிலும், கூடைகளிலும் தூக்கிச்சென்றனர். மீன்பிடி திருவிழாவில் சுமார் 10 கிலோ வரை எடை கொண்ட மீன்கள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்