< Back
மாநில செய்திகள்
பில்லூர் பெரிய குளத்தில் மீன்பிடி திருவிழா
கரூர்
மாநில செய்திகள்

பில்லூர் பெரிய குளத்தில் மீன்பிடி திருவிழா

தினத்தந்தி
|
7 July 2022 6:08 PM GMT

தோகைமலை அருகே உள்ள பில்லூர் பெரிய குளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடந்தது.

பில்லூர் பெரிய குளம்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பில்லூரில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான பெரிய குளம் உள்ளது. பருவமழையின் போது நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இக்குளத்தில் தேங்கி நிற்கும். பின்னர். தேங்கி நிற்கும் மழைநீரானது மதகு வழியாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.இதேபோல் மழைகாலங்களில் மழைநீரோடு பல்வேறு வகையான மீன்கள் கோவில் குளத்திற்கு வருவது உண்டு. இந்த குளத்தில் வளர்ந்து வரும் மீன்களை கோடைகாலங்களில் தண்ணீர் வற்றும் போது அனைவரும் ஒன்று சேர்ந்து மீன்படிப்பது வழக்கம். அப்போது மீன்பிடி திருவிழா நடைபெறும்.

மீன்பிடி திருவிழா

இந்தநிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பருவமழை பெய்து வருவதால் பில்லூர் பெரிய குளத்திற்கு பல்வேறு வகையான மீன்கள் வரத்தொடங்கியது. தற்போது கோடைகாலம் தொடங்கியதால் இந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க 8 பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர்.இதனை அடுத்து கிராம மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் 20 ஆண்டுளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடந்தது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதையொட்டி பில்லூரில் உள்ள மாரியம்மன், பாம்பலம்மன், பட்டதளச்சியம்மன் உள்பட மந்தையில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து பொதுமக்கள் வழிபட்டனர். தொடர்ந்து 8 பட்டி முக்கியஸ்தர்கள் ஒன்று சேர்ந்து மீன்படி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதில் பில்லூர் ஊராட்சி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வலைகள் மூலம் தங்களது தேவையான மீன்களை ஆர்வத்துடன் பிடித்து சென்றனர்.இதில், கொரவை, அயிரை, முள்ளு கெண்டை, விரால் போன்ற பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடந்ததால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்