6 நாட்களில் முடியும் மீன்பிடி தடைக்காலம்... கடலுக்கு செல்ல ஆயத்தமாகும் மீனவர்கள்
|ஆண்டு தோறும் 3 மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது.
சென்னை,
தமிழகத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதப்படுகிறது. எனவே ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரையிலும் 61 நாட்கள், விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. கடந்த 1½ மாதத்திற்கு மேலாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ராமேசுவரம், பாம்பன், தொண்டி, சோழியக்குடி, ஏர்வாடி, தூத்துக்குடி, குமரி, என தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைய இன்னும் 6 நாட்களே உள்ளது. எனவே மீன்பிடிக்க செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். புதிதாக வர்ணம் பூசப்பட்டும், பதிவு எண் எழுதப்பட்டும் புதுப்பொலிவுடன் படகுகள் காட்சி தருகின்றன. மேலும் பல விசைப்படகுகளை மீனவர்கள் சிறிது தூரம் கடலுக்குள் இயக்கி என்ஜின் சரியாக உள்ளதா? என சோதனை செய்து வருகின்றனர்.
2 மாதத்திற்கு பிறகு மீன்பிடிக்க செல்ல உள்ளதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்கள் உள்ளனர்.