பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் அடக்குமுறை அதிகரித்துள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
ராமேஸ்வரம்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தார். வழிநெடுகிலும் முதல்-அமைச்சருக்கு பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து மண்டபத்தில் இன்று நடைபெற்று வரும் மீனவர் நல மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது,
மீனவர் நல மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் அன்பான அழைப்பை ஏற்று நான் இங்கு வந்திருக்கிறேன். பொதுவாக அரசு நிகழ்ச்சிகளில் மீனவர் சங்கங்களை இணைத்து கொள்ள மாட்டார்கள். அதேபோல் மீனவர்கள் மாநாடாக இருந்தால் அதில் அரசு அதிகாரிகள் இடம் பெற மாட்டார்கள்.
ஆனால் இந்த இரு தரப்பினரையும் இணைத்து இந்த மாநாட்டை அமைச்சர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள். மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே 5வது பெரிய மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது. மீனவர்களுக்காக திமுக அரசு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது.
மீனவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் கருணாநிதி ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களின் நண்பராக செயல்பட்டு வருகிறார். மீன்பிடி தடைக்கால உதவித்தொகையை உயர்த்தி உள்ளோம்.
காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. கடல் மீனவர்களுக்கு சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கடல் மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டம் நடைமுறையில் உள்ளது.
நாட்டுப்படகு மீனவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு, டீசல் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டுப்படகு மீனவர்களுக்கு இயந்திரம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் அடக்குமுறை அதிகரித்துள்ளது. எங்கெங்கு தூண்டில் வளைவுகள் சாத்தியமோ அங்கெல்லாம் தூண்டில் வளைவுகள் அமைக்க பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.