மீனவர்கள் போராட்டம் எதிரொலி; கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கவில்லை
|கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை என பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நடுக்கடலில் அமைந்துள்ளது கச்சத்தீவு. இது ராமேசுவரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவு பகுதியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டின் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இந்த மாதம் 23 மற்றும் 24-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து 3 ஆயிரத்து 500 பக்தர்களும், இலங்கை தரப்பிலிருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இதனிடையே இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தற்போது போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீனவர்களின் போராட்டம் காரணமாக கச்சத்தீவு திருவிழாவில் இந்த ஆண்டு இந்தியர்கள் யாரும் பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார்.