மீனவர்கள் பிரச்சினை: இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? - வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி விளக்கம்
|மீனவர்கள் பிரச்சினை குறித்து இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்று டெல்லி மாநிலங்களவையில் வைகோ எம்.பி. கேள்வி எழுப்பினார்.
சென்னை,
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்களே... இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று டெல்லி மாநிலங்களவையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளிதன் பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
கடந்த 3 ஆண்டுகளில் 485 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 66 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசின் தொடர் முயற்சியால் 461 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது இலங்கைக் காவலில் 24 இந்திய மீனவர்கள் உள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற இருதரப்பு உச்சி மாநாட்டின் போது, இலங்கைப் பிரதமருடன், இந்திய பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தையில், இந்திய மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிவிவகாரத்துறை மந்திரி கொழும்புக்கு சென்றபோதும், இலங்கை மீன்வளத்துறை மந்திரியை சந்தித்து இதுகுறித்து விவாதித்தார்.
கடந்த ஆண்டு இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, இலங்கைப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலிலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் கையாள வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கத்திடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இரு அரசாங்கங்களுக்கும் இடையில் நிலவும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், எந்தச் சூழ்நிலையிலும் தாக்குதல்கள் நடைபெறகூடாது என்பதை இரு தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இலங்கை காவலில் உள்ள இந்திய மீனவர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து, இலங்கையின் நிதி மந்திரிகளுடனான சந்திப்பின்போதும், இலங்கையின் வெளியுறவுத்துறை மந்திரியுடனான இருதரப்பு சந்திப்பின்போதும் விவாதித்தார். சமீபத்திய நிதி மந்திரியின் இலங்கை பயணத்தின் போதும் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.