< Back
மாநில செய்திகள்
மீனவர்கள் விவகாரம்: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாநில செய்திகள்

மீனவர்கள் விவகாரம்: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தினத்தந்தி
|
24 Aug 2024 1:43 PM IST

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரிடம், தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை விரைவாக விடுவிக்க உடனடி மற்றும் உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட மற்றொரு சம்பவம் குறித்து மிகுந்த கவலையுடன் உங்களுக்கு எழுதுகிறேன். 23-08-2024 அன்று, பதிவு செய்யப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட படகு No.IND-TN-06-MM-1054 மற்றும் 11 மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதுபோன்ற சம்பவங்கள் ஆபத்தான வகையில் நிகழ்கின்றன என்பதை நான் பலமுறை எடுத்துரைத்தேன். 2024ல் மட்டும் 324 மீனவர்களும், 44 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் கைது நடவடிக்கைகளால் தமிழக மீனவ சமூகம் தொடர்ந்து பெரும் இன்னல்களை சந்தித்து வருவது அவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.

மேலும், கடந்த இரண்டு வாரங்களில், இலங்கையைச் சேர்ந்த இனந்தெரியாத நபர்களால் கடலில் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் ஒன்றிரண்டு நடந்துள்ளது, இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். எனவே, எங்கள் மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகள் அனைவரையும் விரைவாக விடுவிக்க உடனடி மற்றும் உறுதியான ராஜதந்திர முயற்சிகளை தொடங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்