< Back
மாநில செய்திகள்
உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்

தினத்தந்தி
|
21 Nov 2022 6:45 PM GMT

உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என உலக மீனவர் தினத்தில் இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிரை பணயம் வைத்து தொழில் செய்யும் மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என உலக மீனவர் தினத்தில் இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலக மீனவர் தினம்

உலக மீன்வள, மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வளரும் நாடுகளில் சுமார் 30 மில்லியன் முதல் 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.

உலக மக்களுக்கு தேவையான உணவு புரதத்தில் 25 சதவீதத்துக்கும் அதிகமான அளவு மீன்களில் இருந்து பெறப்படுகிறது. மக்கள் ஆண்டுக்கு 100 மில்லியன் டன் மீன்களை உணவாக உட்கொள்கின்றனர். இந்தியாவில் 7,516 கிலோ மீட்டர்கள்(4,670 மைல்) கடல் கடற்கரையும், 3,827 மீனவ கிராமங்களும், 1,914 பாரம்பரிய மீன் இறங்கு நிலையங்களும் உள்ளன.

மீன் உற்பத்தியில், இந்தியா 2-வது இடம்

இந்தியாவில் மீன்பிடி துறையானது நாட்டில் 28 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது. உலக உற்பத்தியில் 7.96 சதவீத பங்கு வகிக்கும் இந்தியா, சீனாவிற்கு அடுத்தபடியாக மீன் வளர்ப்பு மூலம் மீன் உற்பத்தியில் 2-வது இடத்தில் உள்ளது.

2020-21 நிதியாண்டில் மொத்த மீன் உற்பத்தி 14.73 மில்லியன் டன்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி மீன்பிடித்தொழிலில் 334.41 பில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானமாக கிடைக்கிறது என்று மீன்வள ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பின்மை

இவ்வாறு ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்க செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆனால், இத்தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்கதலைவர் ராஜேந்திர நாட்டார் கூறியதாவது:-

துப்பாக்கி குண்டுகள்

உயிரை பணயம் வைத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர் புயல், சூறைக்காற்று, கடல்சீற்றம் போன்றவற்றால் பாதி நாட்களுக்கு மேல் தொழிலுக்கு செல்லமுடியாமல் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். மழை, புயல் என இயற்கைப் பேரிடர்களால் பரிதவிக்கும் மீனவர்களை, அண்டை நாட்டு கடற்படையும், சொந்த நாட்டு கடற்படையும் அவ்வப்போது அத்துமீறித் தாக்குகிறது.

உயிரைப் பணயம் வைத்து தொழில்புரிவோரை துப்பாக்கிக் குண்டுகளால் பதம் பார்க்கிறது. ஒவ்வொரு நாளும் கடலில் போராடிக் கொண்டிருக்கும் மீனவர்களை, கரையிலும் போராடவிடக் கூடாது. மீனவர்களின் வாழ்வாதாரத்துடன், அவர்களது உயிரையும் சேர்த்து பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

படகுகளை மீட்க வேண்டும்

தமிழக மீனவர்கள் பறிகொடுத்த படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் தினத்தில் மட்டும் மீனவர்களை நினைக்காமல் அவர்கள் வாழ்வாதாரத்தில் மீண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்