கடலூர்
கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த மீனவர்கள் திடீர் கைது
|பறிமுதல் செய்யப்பட்ட படகை விடுவிக்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மீனவர்களை போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்தும் வலை மற்றும் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் முதுநகர் அருகே ராசாப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த படகை விடுவிக்கக்கோரி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அவர்கள் ராசாப்பேட்டை கிராமத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்றனர். அதற்குள் 37 மீனவர்கள் 2 வேனில் மனு கொடுப்பதற்காக கடலூர் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். அவர்களை பார்த்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சபியுல்லா, புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார், வேனில் வந்த மீனவர்களை திடீரென கைது செய்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச்சென்றனர்.
விடுவிப்பு
இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா சம்பவ இடத்துக்கு சென்று போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் எவ்வித போராட்டமும் செய்ய மாட்டார்கள். மனு கொடுப்பதற்காக வந்துள்ளார்கள். ஆகவே அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் தி.மு.க. அலுவலகத்திற்கு சென்று, மாநகர செயலாளரிடம் கோரிக்கை பற்றி பேசினர். அப்போது அவர்கள் கூறுகையில், சம்பவத்தன்று தைக்கால் ஆற்றில் எங்கள் படகு என்ஜினை சீரமைத்து கொண்டிருந்தோம். அப்போது எங்கள் படகை மீன்வளத்துறை அதிகாரிகள் பூட்டை உடைத்து, எடுத்துச்சென்று விட்டனர்.
ஒப்படைக்க வேண்டும்
15 பேர் கூட்டாளிகள், 15 பேர் தொழிலாளர்கள், 10 பேர் உதவியாளர்கள் என 40 பேர் குடும்பமும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம். ஆகவே பறிமுதல் செய்த படகை எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.இதை கேட்ட மாநகர செயலாளர், இது பற்றி மேயரிடம் மனு அளியுங்கள். உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.