சென்னை
பட்டினப்பாக்கம் பகுதியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தியதால் 2-வது நாளாக மீனவர்கள் சாலை மறியல்
|சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள சாலையோர மீன் கடைகள் அப்புறப்படுத்தியதால் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் பட்டினப்பாக்கம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தாமாக முன்வந்து வழக்கு
சென்னை பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான சர்வீஸ் சாலையின் சாலையோரப் பகுதிகளை மீன் கடைகள் மற்றும் உணவகங்கள் ஆக்கிரமித்து இருப்பதாகவும், இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை சாலைகளில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறி சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சிக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், வருகிற 18-ந்தேதிக்குள் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள சாலையோர நடைபாதையில் எந்த கடைகளும் இல்லை என்ற நிலையை உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினமே பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள சாலையோர கடைகளை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதி மீனவர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், மாநகராட்சி அதிகாரிகள் இது கோர்ட்டு உத்தரவு. கடைகளை அகற்றித்தான் ஆக வேண்டும் என்று எடுத்துக்கூறி கடைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.
சாலை மறியல் போராட்டம்
நேற்று 2-வது நாளாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் உள்ள சாலையோர கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2-வது நாளாக மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டினப்பாக்கம் நொச்சிக்குப்பம் முதல், சீனிவாசபுரம் வரையில் அமைந்துள்ள முல்லை மாநகர், நம்பிக்கை நகர், ராஜீவ்காந்தி நகர், பவானிக் குப்பம் பகுதி மக்களும் மீனவர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மீனவர்கள் தங்களின் மீன்பிடி படகுகளையும் சாலையில் இழுத்து போட்டு அதில் அமர்ந்தபடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதுடன் அவர்களை கைது செய்து கொண்டு செல்வதற்காக அரசு பஸ்களும் கொண்டு வரப்பட்டன.
அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் ஆதரவு
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ஜெயவர்தன், மாவட்ட செயலாளர் அசோக், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் காளிதாஸ், சென்னை ராஜா, முல்லை மாநகர் ஊர் நிர்வாகி சசிக்குமார், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொருளாளர் எஸ்.ஜெயசங்கரன் தலைமையில் நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் அந்த பகுதிக்கு வந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. தா.வேலு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, அவர் இது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று மாலையில் உரிய பதில் அளிக்கிறேன். அதுவரை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட போராட்டக்காரர்கள் சம்பவ இடத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
பின்னர், நேற்று மாலை எம்.எல்.ஏ. தா.வேலுவுடன் பட்டினப்பாக்கம் பகுதி கிராமங்களின் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், கோர்ட்டில் அடுத்த வாய்தா 18-ந்தேதி தான் வருகிறது. அதுவரை, சர்வீஸ் சாலையின் மேற்கு பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தி வைத்துள்ள பகுதியின் அருகில் குறிப்பிட்ட அளவுக்கு கோடு போட்டு அந்த எல்லைக்குள் மட்டும் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி மீன் வியாபாரம் செய்வது என்றும், பட்டினப்பாக்கம் பகுதி கிராம மக்களின் சார்பாக ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து 18-ந்தேதி நடைபெறும் வழக்கில் கலந்துகொள்ளச் செய்து மீனவர்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி தெரிவித்தார்.
வருகிற 18-ந்தேதி விசாரணைக்கு வரும் இந்த வழக்கின் நடவடிக்கைகளுக்கு பிறகு என்ன முடிவு ஏற்படுகிறதோ அதனை பொறுத்து மீண்டும் பட்டினப்பாக்கம் பகுதி கிராமங்களின் ஊர் நிர்வாகிகள் மற்றும் இதர ஆதரவாளர்களுடன் உரிய ஆலோசனை செய்து அடுத்த கட்ட முடிவுகளை எடுப்பது என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தோணி தெரிவித்தார். எனினும், இன்றும் பட்டினப்பாக்கம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள் என்ற தகவல் தெரியவந்துள்ளது.