< Back
மாநில செய்திகள்
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை
மாநில செய்திகள்

சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி சென்னையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
8 Oct 2022 2:23 PM IST

சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி சென்னையில் மீனவர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரம்பரிய மீன்பிடி முறையான சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கோரி கடல்சார் மக்கள் நல சங்கமம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பரதவ ஆதரவு இயக்க தலைவர்கள் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து மீனவர்கள், மீனவ கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க மீனவர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். அதனைத்தொடர்ந்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* கொல்கத்தா, ஒடிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர், அதேபோல் தமிழகத்திலும் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

* தற்போது வழங்கப்படும் டீசல் மானியம் 1,800 லிட்டரில் இருந்து 2 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்க வேண்டும்.

* பைபர் படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் 300 லிட்டரில் இருந்து 500 -ஆக அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீனவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 'மீன்களை பிடித்து அவற்றை வியாபாரம் செய்யும் அனைவருமே வணிகர்கள் தான். அந்தவகையில் மீனவர்களுக்கு வணிகர் சங்கங்களின் ஆதரவு முழுவதுமாக இருக்கும்' என்றார்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கடல்சார் மக்கள் நல சங்கமம் பொதுச்செயலாளர் எல்.பிரவீன்குமார் கூறும்போது, 'சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கோரி, முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கவே இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் 250-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் ஒன்றுசேர்ந்துள்ளனர். சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் மீன்களின் எண்ணிக்கை குறையும் எனக் கூறுவது தவறான கூற்று' என்றார்.

மேலும் செய்திகள்