சுருக்குமடி வலைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னையில் மீனவர்கள் போராட்டம்
|சென்னை:
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அரசாணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு தடை செய்த தமிழக அரசு சுருக்குமடி வலை பயன்படுத்துவதால் கடல் வளம், மீன்களின் இனப்பெருக்கம், பவளப் பாறைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தடை விதிக்கப்பட்டது முதல் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் மீனவர்கள் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்ட மக்களும் கலந்து கொண்டனர்.
சுருக்குமடி வலைகளால் கடல் வளம் பாதிக்கப்படுவதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை.
மேலும் சுருக்குமடி வலைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி சுருக்குமடி வலைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கூறி அவர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.