< Back
மாநில செய்திகள்
மீன்பிடிக்க அனுமதிக்க கோரி மீனவர்கள் போராட்டம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மீன்பிடிக்க அனுமதிக்க கோரி மீனவர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
20 Aug 2022 5:34 PM GMT

மீன்பிடிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

மீன்பிடிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் டோக்கன் வழங்கும் அலுவலகம் முன்பு மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன் பகுதிகளில் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க செல்ல அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் புயல் உருவாகியுள்ள தூரத்திற்கும் இந்த கடல் பகுதிக்கும் அதிக தூரம் என்றும் இந்த புயல் சின்னத்தால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றும் அதனால் வழக்கம்போல் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என்றும் ராமேசுவரம் மீன்பிடி டோக்கன் அலுவலகம் முன்பு நேற்று மீனவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மீனவர் சங்க பிரதிநி திகள் என்.ஜே.போஸ் எமரிட், சகாயம், சேசு ராஜா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த மீன் துறை அதிகாரிகளிடம் ராமேசுவரம் பகுதியில் கடல் சீற்றமோ பலத்த காற்று வீசப்படாத நேரத்தில் இது போன்று மீன்பிடிக்க அனுமதி கிடையாது என நிறுத்தி வைப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. அதனால் வழக்கம்போல் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மீன்பிடிக்க சென்றனர்

அப்போது மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன் துறை அதிகாரிகள் மீன் பிடிக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். தொடர்ந்து மீன் துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று ராமேசுவரத்தில் இருந்து நேற்று 520 விசைப் படகுகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.அதுபோல் ராமேசுவரம், பாம்பன் தங்கச்சிமடம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்களும் வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றனர்.

இதனிடையே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஏற்றப்பட்டிருந்த 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டும் நேற்று பிற்பகலில் இறக்கப்பட்டது. புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி கிடையாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீனவர்கள் போராட்டம் நடத்திய பின்பு மீன் பிடிக்க வழக்கம்போல் அனுமதி வழங்கியது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
மேலும் செய்திகள்