< Back
மாநில செய்திகள்
சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

சின்னமுட்டத்தில் பெட்ரோல் பங்க் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

கன்னியாகுமரி அருகே பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி அருகே பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் பங்க்

கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இப்பகுதியில் உள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் மூலமாகவும் கடலுக்கு மீன்பிடிக்க சென்று தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்கள் நாட்டு படகுகளை நிறுத்தி வைத்துள்ள பகுதிக்கும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் தனியார் இடத்தில் அதன் உரிமையாளர் புதிதாக பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான காட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்தார்.

போராட்டம்

இந்நிலையில் இந்த பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் அமைத்தால் எதிர்பாராத விதமாக தீ விபத்து நடந்தால் தங்கள் குடியிருப்புகளுக்கும், நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறி சின்னமுட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானர்கள் புதிதாக பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு வந்த இடத்திற்குள் நுழைந்தனர். அங்கு நடைபெற்று வந்த கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி போலீசார் மீனவ மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பெட்ரோல் பங்க் உரிமையாளர் தாங்கள் அரசின் பல்வேறு துறைகளில் உரிய அனுமதி பெற்ற பின்னரே கட்டுமான பணிகளை செய்து வருவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், அதுவரை கட்டுமான பணிகள் நடத்த கூடாது என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீனவ மக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்