திருவள்ளூர்
கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு
|கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்கோபுரம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து 20 படகில் சென்று மின்கோபுர பணியை தடுத்து முற்றுகையிட்டனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள எண்ணூர் பகுதியை சேர்ந்த காட்டுக்குப்பம், சின்னகுப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், சிவன் படை வீதி குப்பம், சிவன்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவர்கள் கொசஸ்தலை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எண்ணூரில் செயல்பட்டு வரும் வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கப்பணிக்காக கொசஸ்தலையாற்றின் நீர்பிடிப்பு பகுதியில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உயர்மின் கோபுரங்களை அங்கு அமைப்பதற்கு அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மேற்கண்ட 8 கிராம மீனவர்கள் 20 படகுகளில் பணி நடக்கும் இடத்திற்கு வந்து மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதில் கொசஸ்தலையாற்றில் உயர்மின் கோபுரம் அமைப்பதால் தங்களின் வாழ்வாதாரமான மீன்பீடி தொழில் பாதிக்கப்படுவதாகவும், மீன் இனப்பெருக்க வளம் பாதிக்கும் என குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் மற்றும் எண்ணூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிற வெள்ளிக்கிழமை மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.