தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
|தூத்துக்குடியில் பலத்த காற்று எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன.
பலத்த காற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களை வாட்டி வந்த வெயிலுக்கு, கடந்த சில நாட்களாக பருவமழை விடை கொடுத்து உள்ளது. கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் பலத்த காற்ற வீசி வருகிறது. நேற்று முன்தினம் முதல் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காற்று நேற்றும் தொடர்ந்து வீசியது. ரோட்டில் புழுதியை வாரி இறைத்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மாலையில் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் பெய்தது. அதே நேரத்தில் சில இடங்களில் மரங்களும் முறிந்த விழுந்து உள்ளன. அதன்படி திரேஸ்புரம் பகுதியில் ஒரு வேப்பமரம் சரிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக பொதுமக்கள், அதிகாரிகள், மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
மீனவர்கள்
இந்த நிலையில் தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் விசைப்படகு மீனவர்கள் சங்கங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் இந்திய வானிலை ஆய்வு மையம் தென்தமிழக கடற்பகுதி, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) வரை சுழல் காற்று வீசும். இந்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்து உள்ளார். அதன்படி நேற்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான நாட்டுப்படகுகளும் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டு இருந்தன.
---