சென்னை
சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு
|வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அங்கு மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
எண்ணூர் பகுதியில் ஆறும், கடலும் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் ஏராளமான நண்டுகள், இறால் மீன்கள் கிடைக்கும். இந்த பகுதியில் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், காட்டுகுப்பம், எண்ணூர் குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுதண்ணீர், சாம்பல் கழிவுகளை முகத்துவாரம் பகுதியில் ஆற்றில் திறந்து விடுவதால் நண்டு, இறால் மீன்கள் அழிந்து வருவதாகவும், மேலும் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறும் சுடுநீரை நேரடியாக கடலில் கலக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வடசென்னை அனல் மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கடந்த சில ஆண்டுகளாக மீனவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் தாழங்குப்பம், நெட்டுகுப்பம், காட்டுகுப்பம், எண்ணூர் குப்பம் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள், நேற்று பைபர் படகுகளில் கருப்பு கொடி ஏந்தி முகத்துவாரம் பகுதியில் ஆற்றுக்குள் சென்று வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுநீர் வெளியேறும் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை கொண்டு அடைத்தனர். இதுபற்றி தகவலறிந்ததும் எண்ணூர் போலீசார் மற்றும் வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.