< Back
மாநில செய்திகள்
மீன்களுக்கு இருக்கும் மதிப்பு மீனவர்களுக்கு இல்லை - சீமான்
மாநில செய்திகள்

மீன்களுக்கு இருக்கும் மதிப்பு மீனவர்களுக்கு இல்லை - சீமான்

தினத்தந்தி
|
21 Aug 2022 5:52 AM IST

மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மீனவர்களுக்கு இல்லை என்று சீமான் கூறினார்.

குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் அடிக்கடி விபத்தில் சிக்கி மீனவர்கள் உயிரிழந்து வருகிறார்கள். எனவே, துறைமுக மறுசீரமைப்பு பணிைய உடனே தொடங்கி முடிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிடுவதற்காக நேற்று மாலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார். அவர் துறைமுக பகுதிகள் அனைத்தையும் சுற்றி பார்த்தார்.

பின்னர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மீனவ மக்கள் பாதுகாப்பாக மீன்பிடிப்பதற்கு தேங்காப்பட்டணம் துறைமுகம் உருவாக்கப்பட்டது. ஆனால் பூகோள அமைப்பை ஆராயாமல் தவறான முறைப்படி இந்த துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.

சாதாரணமாக மீன்பிடித் துறைமுகங்களுக்கு முகத்துவாரத்தின் அகலம் குறைந்தபட்சம் 300 மீட்டர் இருக்க வேண்டும். ஆனால் இந்த துறைமுகத்தில் 80 மீட்டர் அகலத்தில் முகத்துவாரப் பகுதி அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

விவசாய நிலத்தை அழித்து விவசாயத்தை அழிவு பாதைக்கு கொண்டு சென்ற அரசுகள் தற்போது மீனவ சமுதாயத்தையும் அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறது. இந்த நிலை நீடித்தால் மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும். மத்திய அரசின் செயல்பாடு அனைவரும் அறிந்ததே. ஒகி புயலில் இறந்தவர்களை கூட மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மீனவர்களுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்