சின்னங்குடியில் கடற்கரை தடுப்புச்சுவர் கட்டித்தர மீனவர்கள் கோரிக்கை
|புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
தரங்கம்பாடி,
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், மருதம்பள்ளம் ஊராட்சி, சின்னங்குடி மீனவ கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாண்டஸ் புயல் சென்னையில் கரையை கடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சின்னங்குடி கிராமம், மீனவர்கள் படகுகளை கரைகளில் வரிசையாக அடுக்கி வைத்து பாதுகாத்து வந்தனர். புயல் கரையை கடந்த போது அதனுடைய தாக்கத்தில் சின்னங்குடி மீனவர்களின் 20-க்கும் மேற்பட்ட படகுகள் சேதம் அடைந்தது.
அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்போது கடல்நீர் வீட்டுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு சுவர் அல்லது கருங்கல் கொட்டி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற நிலைகளில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு சின்னங்குடி கடற்கரையில் தடுப்புச் சுவர் அல்லது கற்களை கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுக்குமாறும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்கவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.