மயிலாடுதுறை
கடலோர பாதுகாப்பில் மீனவர்கள் கவசமாக திகழ்கின்றனர்
|கடலோர பாதுகாப்பில் மீனவர்கள் கவசமாக திகழ்கின்றனர் என மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
திருவெண்காடு:
மீனவர்களிடம் குறைகளை கேட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் மத்திய அரசின் சாகர் பரிக்ரமா என்ற திட்டத்தின்கீழ் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பூம்புகார் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம், மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மீன்வளத்துறை இணை செயலாளர் நீது வரவேற்றார்.
இதில் மத்திய கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை மந்திரி பர்ஷோத்தமன் ரூபாலா, மத்திய கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு பூம்புகார், தரங்கம்பாடி மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
தனி அமைச்சகம்
பின்னர் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசுகையில், இந்திய நாட்டின் கடலோர பாதுகாப்பில் கவசமாக மீனவர்கள் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. மீனவர்கள் கடலோர காவல் தெய்வங்கள் என்று அழைக்கலாம். மீனவர்கள் இயற்கையை பராமரிப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீனவர்கள் நலனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். மீனவர்களுக்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி தந்த பெருமை அவரை சாரும். பிரதமரின் திட்டத்தால் கடைக்கோடியில் வசிக்கும் மீனவர்களும் பயனடைகிறார்கள் என்ற செய்தி மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.
ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி
தொடர்ந்து மத்திய இணை மந்திரி பேசுகையில் இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் கி.மீ. கடலோர கிராம மீனவர்களை சந்திக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் கடலோர மீனவர்களை சந்தித்து வருகின்றோம். மீனவர் நலன் சார்ந்த குழுக்களில் மீனவர் பிரதிநிதி இடம்பெற வேண்டுமென பாரத பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
2014-ம் ஆண்டுக்கு பிறகு மீனவர்களுக்கு பல்வேறு சலுகைகளை செய்திட ரூ.38 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மீனவ பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக கடல்பாசி உற்பத்தி செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 126 கோடியில் கடல்பாசி தயாரிக்கும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நிதி உதவி
விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் பூம்புகார் சங்கர், பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் வக்கீல் ராஜேந்திரன், பா.ஜ.க மயிலாடுதுறை மாவட்ட துணை தலைவர் விஜயாலயன் முன்னாள் ஒன்றிய தலைவர் முருகன், பூம்புகார் கிராம பொறுப்பாளர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பூம்புகார் சந்திரபாபு நாட்டார் நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் மீனவர்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி, பூம்புகார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் நிஷாந்த் முன்னிலையில் மத்திய மந்திரிகள் நிதி உதவிக்கான காசோலைகளை வழங்கினர்.