< Back
மாநில செய்திகள்
மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
மாநில செய்திகள்

மீனவர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 10 பேருக்கு ஆயுள் தண்டனை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

தினத்தந்தி
|
28 April 2023 5:34 PM IST

குற்றம்சாட்டப்பட்ட 20 நபர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

கடலூர்,

கடந்த 2018-ம் ஆண்டு மே 5-ந்தேதி கடலூரில் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் இடையே சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது மீனவர்கள் கத்தி, அரிவாள், சுளுக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த மோதலில் அ.தி.மு.க. பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர். கடலூர் முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவடையும் முன்பே ஒருவர் இறந்து விட்டார்.

இதையடுத்து 20 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட 20 நபர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்