< Back
மாநில செய்திகள்
இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் - சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவு
மாநில செய்திகள்

இந்திய கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மீனவருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் - சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் உத்தரவு

தினத்தந்தி
|
21 Oct 2022 3:44 PM IST

இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்க முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்

சென்னை:

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படை வீரர்கள் படகை நிறுத்த கோரி எச்சரித்துள்ளனர்.

ஆனால் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி கடற்படை வீரர்கள் விசைப்படை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில், விசைப்படகில் இருந்த வீரவேல் என்ற மீனவருக்கு வயிறு, தொடை பகுதியில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார்.

இவர்கள் மயிலாடுதுறை மீனவர்கள் என்பதை அறிந்த கடற்படை வீரர்கள் காயம் அடைந்தவரை மீட்டு வீமான படைவீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், குண்டடிப்பட்ட மீனவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விமானபடை வீரர்கள் அனுமதித்தனர். அவருக்கு டாக்கடர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்நிலையில் இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம் மற்றும் சிறப்பான சிகிச்சை அளிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது,

மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல், த/பெ. காசிராஜன் என்பவர், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

சம்பவத்தில் காயைமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் மீனவர் திரு.வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்