திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
|கும்மிடிப்பூண்டி அருகே மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள பாட்டை குப்பம் என்ற மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுந்தரய்யா (வயது 35). இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி யோகேஸ்வரி (30) என்ற மனைவி உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாததாக கூறப்படுகிறது. பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என தெரிகிறது. எனவே மனஉளச்சலில் இருந்த சுந்தரய்யா கடந்த 20-ந்தேதி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டின் மின் விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் நீண்ட நேரம் வெளியே வராததால் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த சுந்தரய்யாவை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து கவலைக்கிடமான நிலையில், அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மீனவர் சுந்தரய்யா உயிரிழந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக் டர் அய்யனாரப்பன் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மீனவர் சுந்தரய்யாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.