சென்னை
வடசென்னை அனல்மின் நிலையத்துக்கான மின்கோபுரத்தில் படகு மோதி மீனவர் உயிரிழப்பு; பசுமை தீர்ப்பாயம் விசாரணை
|வடசென்னை அனல்மின் நிலையத்துக்கான மின்கோபுரத்தில் படகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவத்தில் பசுமை தீர்ப்பாயம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
சென்னை,
சென்னையை அடுத்த எண்ணூர் முகத்துவாரம் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் விக்னேஷ் (வயது 33), கடந்த சில தினங்களுக்கு முன்பு பைபர் படகில் மீன்பிடிக்க சென்றார். மீண்டும் அவர் கரைக்கு திரும்பியபோது வடசென்னை அனல்மின் நிலையத்துக்காக அமைக்கப்படும் மின் கோபுரத்துக்கான பாதையில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.
இந்த பகுதியில் மின்கம்பம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக குவிந்து கிடக்கும் கழிவுகளில் படகு மோதி விக்னேஷ் உயிரிழந்ததாக சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வக்கீல் ஒருவர் முறையிட்டார்.மேலும், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு புறம்பாக தடை செய்யப்பட்ட பகுதியில் இந்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 'அனுமதிக்கப்பட்ட இடத்தில் எத்தனை மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன?, எத்தனை மின் கம்பங்கள் மாற்றுபாதையில் அமைக்கப்பட்டுள்ளன?, அவ்வாறு மாற்றுப்பாதையில் மின் கம்பங்கள் அமைக்க மாநில கடலோர மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?, மாற்றுப்பாதையில் மின் கம்பம் அமைக்க மாநில கடலோர மேலாண்மை ஆணையம் எதிர்ப்பு தெரிவித்ததா? என்பது போன்ற விவரங்களை தமிழக மின் தொடரமைப்பு கழகம் மற்றும் மாநில கடலோர மேலாண்மை ஆணையம் தெரிவிக்க வேண்டும்' எனக்கூறி விசாரணையை அக்டோபர் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.