கன்னியாகுமரி
மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
|புதுக்கடை அருகே மனைவி நடத்திய ஏலச்சீட்டில் ரூ1½ கோடி நஷ்டம் ஏற்பட்டதால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கடை:
புதுக்கடை அருகே மனைவி நடத்திய ஏலச்சீட்டில் ரூ1½ கோடி நஷ்டம் ஏற்பட்டதால் மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஏலச்சீட்டில் நஷ்டம்
தேங்காப்பட்டணம் அருகே உள்ள இனயம் புத்தன்துறை பாரதி தெருவை சேர்ந்தவர் ஆன்டணி(வயது59), மீனவர். இவருடைய மனைவி உஷா. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரை நம்பி அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஏலச்சீட்டில் முதலீடு செய்திருந்தனர்.
ஆனால், சீட்டு நடத்தியதில் உஷாவிற்கு ரூ.1½ கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஏலச்சீட்டில் சேர்ந்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதில் ஏமாற்றமடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உஷாவின் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்து வந்தனர். இதனால், அவமானம் அடைந்த உஷா அங்கிருந்து தலைமறைவாகி வேறு பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
மீனவர் தற்கொலை
இந்த சம்பவத்தால் மனமுடைந்த ஆன்டணி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுக்கடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஆன்டணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.