கன்னியாகுமரி
நித்திரவிளை அருகே படகு, எந்திரங்களை திருடிய மீனவர் கைது
|நித்திரவிளை அருகே படகு, எந்திரங்களை திருடிய மீனவர் கைது செய்யப்பட்டார்.
தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் மீன்பிடித்து விட்டு கரை திரும்பியதும் தங்களது படகுகளை ஏ.வி.எம். கால்வாய் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பது வழக்கம். அவ்வாறு அங்கு நிறுத்தி வைக்கப்படும் படகுகளில் என்ஜின் மற்றும் உபகரண எந்திரங்கள் அடிக்கடி மர்ம நபர்களால் திருடப்பட்டு வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பூத்துறை பகுதியை சேர்ந்த புேரான்சன் என்பவர் புதிய படகு ஒன்றை வாங்கி ஏ.வி.எம். கால்வாயில் நிறுத்தி இருந்தார். கடந்த 15-ந்தேதி அந்த படகு மாயமாகி இருப்பதை கண்டு புரோன்சன் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் படகை தேடி வந்தனர். அப்போது, சின்னமுட்டம் கடற்கரை பகுதியில் அந்த படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி அருகே பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜேசுபினோ என்ற ஏசுதாஸ் படகை திருடிக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜேசுபினோவை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் புரோன்சனின் படகை திருடிக் கொண்டு வந்து அடையாளங்களை மாற்றி வேறோரு நபருக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜேசுபினோவை கைது செய்து படகை மீட்டனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.