< Back
மாநில செய்திகள்
மீன்வளத்துறை விசைப்படகுக்கு தீவைப்பு
சேலம்
மாநில செய்திகள்

மீன்வளத்துறை விசைப்படகுக்கு தீவைப்பு

தினத்தந்தி
|
25 Oct 2023 1:34 AM IST

மேச்சேரி அருகே மீன்வளத்துறை விசைப்படகுக்கு தீ வைத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேச்சேரி:-

மேச்சேரி அருகே மீன்வளத்துறை விசைப்படகுக்கு தீ வைத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசைப்படகு

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சிறுமீன்களை பிடிக்க தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அப்படி இருந்தும் சிலர் அந்த வலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதுபற்றி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

உடனே மேட்டூர் மீன்வளத்துறை ஆய்வாளர் தேவதர்சினி மற்றும் அதிகாரிகள் நீர்த்தேக்க பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதிகாரிகளை கண்டதும் சிலர் அங்கிருந்து சென்றதாக தெரிகிறது. அவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தீவைப்பு

இதற்கிடையே ரோந்து பணியை முடித்து விட்டு கீரைக்காரனூர் பகுதியில் மீன்வளத்துறைக்கு சொந்தமான படகுகளை அதிகாரிகள் அந்த பகுதியில் நிறுத்தி வைத்து இருந்தனர்.

நேற்று முன்தினம் காலையில் ஒரு விசைப்படகுக்கு மர்மநபர்தீ வைத்துள்ளார். இதில் அந்த படகு எரிந்து சேதமானது. இதைக்கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விசைப்படகுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து மேச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பரபரப்பு

சிறுமீன்களை பிடிக்க தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது என அதிகாரிகள் கூறியதால் ஆத்திரம் அடைந்து, விசைப்படகுக்கு மர்மநபர் தீ வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் மேச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்