நாகப்பட்டினம்
மீன்கள் வரத்து குறைவு
|வேதாரண்யம் பகுதியில் மீன்வரத்து குறைந்தாலும் நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் மீன்வரத்து குறைந்தாலும் நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பலத்த காற்று
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் கடந்த சில நாட்களாக கடலில் பலத்த காற்று வீசுவதாலும், மேலும் மீன்கள் அதிகம் கிடைக்காததாலும் பெரும்பாலான பைபர் படகு, விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இருந்து நாள்தோறும் குறைந்த அளவிலான பைபர் படகுகள் ஐந்து கடல்மைல் தொலைவில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
குறைந்த அளவு மீன்கள்
நாள்தோறும் மீனவர்கள் நள்ளிரவில் மீன் பிடிக்க சென்று காலையில் கரைக்கு திரும்புகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வலையில் வாவல், காலா, பண்ணா, கானாங்கெளுத்தி, சிறியவகை மீன்கள், நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் குறைந்த அளவில் கிடைக்கின்றன.
இதன் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் பைபர் படகுகள் மூலம் குறைந்த தூரம் சென்று மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் நல்ல விலைக்கு போகின்றன.
நல்ல விலை கிடைப்பதால்...
தற்போது வாவல் மீன் ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.1000 வரையிலும், காலா மீன் ரூ.500 முதல் ரூ.700 வரையிலும், இறால் ரூ.300-க்கும் விற்பனை ஆகிறது. புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் விரதம் இருக்கும் நிலையில் மீன்கள் விலை குறைந்து காணப்படும்.
ஆனால் தற்போது அனைத்து வகை மீன்களும் விலை குறையாமல் உயர்ந்து காணப்படுகிறது. குறைந்த அளவு மீன்கள் கிடைத்தாலும் நல்ல விலை கிடைப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புரட்டாசி மாதம் விரதம் என்பதால் விலை குறையும் என நினைத்த அசைவ பிரியர்களுக்கு மீன்களின் விலை உயர்வால் ஏமாற்றமே மிஞ்சியது.