ராமநாதபுரம்
மீன் இறங்குதளம் கட்டும் பணியை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்
|ரூ.20 கோடியில் மீன் இறங்கு தளம் கட்டும் பணியை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார். ஆய்வு
ராமநாதபுரம்,
ரூ.20 கோடியில் மீன் இறங்கு தளம் கட்டும் பணியை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
ஆய்வு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது கணக்குகுழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஓசூர் தொகுதி), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), குழு செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து குழு தலைவர் செல்வபெருந்தகை கூறியதாவது:-பொதுக்கணக்கு குழு நடமாடும் சட்டன்ற பேரவையை போன்றது. அரசின் வெளிப்படை தன்மையை உறுதி செய்கிறது. சிறப்பான நிர்வாகத்தை அரசு மேற்கொள்ளும் பொருட்டு, இந்த குழு செயல்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தையும், அரசின் நிதிநிலையையும் பாதுகாப்பதற்கும், ஒவ்வொரு துறைக்கும் அரசால் ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவிடுவது மற்றும் செலவினங்கள் தொடர்பாக தணிக்கை துறையில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், துறை ரீதியாக களஅய்வு மேற்கொள்ளப் பட்டு, அரசின் நலத்திட்டங்கள் குறித்த செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் அடிப்படையில் அரசிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப் படுகிறது.
அரசால் ஒதுக்கப்படும் நிதியின் ஒவ்வொரு ரூபாயும், ஆக்கப்பூர்வமான, நம்பிக்கையான மற்றும் சிக்கனமாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மீன் இறங்குதளம்
முன்னதாக சட்டமன்ற பொது கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் குழு உறுப்பினர்கள் தனுஷ்கோடி பகுதியில் கடல் ஆமை குஞ்சு பொரிப்பகத்தை பார்வை யிட்டார். மண்டபம் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.20 கோடியில் மீன் இறங்கு தளம் கட்டும் பணியை உரிய காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார். அழகன்குளம் அருகே பொன்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அலையாத்தி காடுகள் உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை பார்வையிட்டார்.
நலத்திட்ட உதவி
சக்கரக்கோட்டை பகுதியில் சிட்கோ தொழில் பேட்டையை பார்வையிட்டார். தெற்குதரவையில் முன்னோடி விவசாயி தரணி முருகேசன் வேளாண் ஆராய்ச்சிப்பண்ணையில் இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்த காய்கறி களையும், சாகுபடி முறைகளையும் பார்வையிட்டார். அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பரமக்குடி முருகேசன், திருவாடனை ராம.கருமாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.