ராமநாதபுரம்
சிங்கப்பூருக்கு மீன், இறால் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை
|ராமநாதபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் முன்னிலையில் சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சி துறை அலுவலர்கள் சுரேஷ், பமீலா, ஆர்த்தி ஆகியோர் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள், இறால் உற்பத்தியாளர்கள், மீன் ஏற்றுமதியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறியதாவது:- சிங்கப்பூர் நாட்டில் கடல் உணவு பொருள்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு கடல் உணவுப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசின் தொழில்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடல் உணவு
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், இறால் வளர்ப்போர், மீன் ஏற்றுமதியாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் தொழில் வளர்ச்சித்துறை சார்பில் தேவையான தொழில் பயிற்சி வழங்கவும், சந்தைப்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்கவும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்துடன் இணைந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள், இறால் உற்பத்தியாளர்களை சந்தித்து ஆலோசனை வழங்க வருகை தந்து உள்ளோம். சிங்கப்பூர் நாட்டில் கடல் உணவு பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த நவீன தொழில்நுட்பங்களை இங்குள்ள மீனவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறான முறையில் மீன்களை சந்தைப்படுத்தும் பொழுது மீனவர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் உரிய விலை கிடைக்கும். அது மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து மீனவர்கள் வரவழைக்கப்பட்டு சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் மாபெரும் உணவு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
கண்காட்சி
அதுபோன்ற மாபெரும் கண்காட்சியில் இங்குள்ள மீனவர்கள் பங்கேற்பதன் மூலம் அந்த நாடுகளுக்கு எந்த வகையான மீன்கள் அதிகளவு தேவை என்பதை கண்டறிந்து நம் பகுதியிலிருந்து அவர்களுக்கு ஏற்றுமதி செய்ய இதுபோன்ற கண்காட்சிகள் பயனுள்ளதாக இருக்கும். மேலும் சிங்கப்பூர் நாட்டிற்கு தேவையான மீன்களை இங்கிருந்து நீங்கள் ஏற்றுமதி செய்யலாம். அங்கிருந்து நார்வே, ஜப்பான் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் சிங்கப்பூர் அரசு உதவியாக இருக்கும்.
எனவே தற்போது சிங்கப்பூர் அரசு தொழில் வளர்ச்சி துறையின் மூலம் இந்தியாவில் 3 இடங்களில் அலுவலகங்கள் அமைத்து தொழில் புரிவோருக்கு தேவையான வழி காட்டுதலை வழங்கி வருகின்றன. தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக செயல்பட்டு வரும் மீன்பிடித் தொழிலை மேலும் விரிவுபடுத்தி அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்திடும் வகையில் சிங்கப்பூர் அரசின் தொழில் வளர்ச்சி கழகம், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன.
வழிகாட்டுதல்
எனவே மாவட்டத்தில் உள்ள மீனவர்கள், மீன் ஏற்றுமதியாளர்கள், இறால் உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்து சிங்கப்பூர் அரசு வழங்கும் வழிகாட்டுதலை பெற்று மீன்பிடி தொழிலில் நல்ல பொருளாதாரத்தை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன், உதவி இயக்குனர் கோபிநாத் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள், இறால் உற்பத்தியாளர்கள், மீனவர் சங்க அமைப்புகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.