தர்மபுரி
குட்டைகள் அமைத்து வளர்க்கப்பட்ட 1 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு நல்லம்பள்ளி அருகே பரபரப்பு
|குட்டைகள் அமைத்து வளர்க்கப்பட்ட 1 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிப்பு நல்லம்பள்ளி அருகே பரபரப்பு
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே குட்டைகள் அமைத்து வளர்க்கப்பட்ட 1 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள வெத்தலக்காரன்பள்ளம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை குட்டை அமைத்து வளர்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது.
இதனை தொடர்ந்து தாசில்தார் ஆறுமுகம், மீன்வள உதவி இயக்குனர் கோகுல ரமணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வெத்தலக்காரன்பள்ளம் கிராமத்துக்கு சென்றனர்.
3 பண்ணை குட்டைகள்
பின்னர் அங்கு விவசாயி ஒருவரின் நெல் வயல்களுக்கு அதிகாரிகள் சென்றனர். அப்போது வயல்களுக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் 3 செயற்கை பண்ணை குட்டைகள் அமைத்து தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை வெளிமாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பதற்காக வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 குட்டைகளில் இருந்து 1 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொண்டு மூடி அழித்தனர். இந்த பணியின்போது வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் மீன்வளத்துறை, வருவாய்த்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.