< Back
மாநில செய்திகள்
நாட்டுப்படகுகளுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

நாட்டுப்படகுகளுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்கவில்லை

தினத்தந்தி
|
29 May 2022 11:38 AM GMT

நாட்டுப்படகுகளுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பனைக்குளம்,

நாட்டுப்படகுகளுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தடைகாலம்

தமிழக கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரையிலும் மீன்களின் இனப்பெருக்க கால சீசனாக உள்ளதால் இந்த 61 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப் பட்டாலும் நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள், சிறிய வத்தைகள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்று வருகின்றன.

இந்தநிலையில் மண்டபம் பகுதியில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் முரல், சூடை உள்ளிட்ட பலவகை மீன்கள் சிக்கி இருந்தன.

இதில் சில நாட்டுப்படகுகளில் இறால் மீன்களும் சிக்கி இருந்தன. விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால் மீன்கள் நல்ல விலை கிடைத்து வருவதால் நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மிகமிக குறைவு

இதுகுறித்து தங்கச்சிமடத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் வினோ கூறியதாவது:- வழக்கமாக தடை காலத்தில் நாட்டுப் படகுகளில் அதிகமான மீன்கள் கிடைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மீன் பிடிக்க சென்று வரும் நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் சூடை, கலர் மீன்கள், இறால் உள்ளிட்ட அனைத்து வகை மீன்களும் மிக மிக குறைவாகவே கிடைத்து வருகின்றன.

தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருவதால்தான் மீன்கள் வரத்தும் குறைந்திருக்கலாம் என நினைக்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மீன்கள் வரத்து மிக மிக குறைவு தான்.

இறால்

அதுபோல் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லும் காலங் களில் நாட்டு படகுகளில் மீனவர்கள் வலையில் கிடைக்கும் இறால் மீன்கள் ஒரு கிலோ ரூ.350-க்கு மட்டுமே விலை போகும். விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாத இந்த சீசனில் தற்போது ஒரு கிலோ இறால் மீன்கள் ரூ.500 வரையிலும் விலை போகிறது.

நாட்டுப்படகு மீனவர்கள் பிடித்து வரும் இறால் மீன்கள் தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இறால் மீன்கள் வரத்து தான் மிகக்குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்