முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு: என்ஜினீயரிங் கல்லூரிகளில் 9,594 இடங்கள் நிரம்பின
|என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், கல்லூரிகளில் 9 ஆயிரத்து 594 இடங்கள் நிரம்பியிருக்கின்றன
சென்னை,
என்ஜினீயரிங் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், கல்லூரிகளில் 9 ஆயிரத்து 594 இடங்கள் நிரம்பியிருக்கின்றன. அதைத் தொடர்ந்து 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.
என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த 10-ந் தேதி தொடங்கியது. மொத்தம் 4 சுற்றுகளாக இந்த கலந்தாய்வை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வுக்கான அனைத்து நடைமுறைகளும் நேற்று காலையுடன் நிறைவுபெற்றன. அந்த வகையில் முதல் சுற்று கலந்தாய்வில் 13 ஆயிரத்து 893 விண்ணப்பதாரர்கள் விருப்ப இடங்களை தேர்வு செய்திருந்தனர். அவர்களில் 12 ஆயிரத்து 996 பேருக்கு தற்காலிக இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. அதில் 5 ஆயிரத்து 887 பேர் இடங்களை உறுதிசெய்து கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர்.
மேலும் 3 ஆயிரத்து 707 பேர் முதன்மை விருப்ப இடங்கள் கிடைக்கும்பட்சத்தில் ஏற்கனவே தேர்வு செய்திருந்த இடங்களில் இருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்த இடத்துக்கான கட்டணத்தை செலுத்தியிருக்க வேண்டும். அந்த வகையில் 3 ஆயிரத்து 707 பேரில், 3 ஆயிரத்து 46 பேருக்கு அவர்களின் முதன்மை விருப்ப இடங்களில் முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
9,594 இடங்கள் நிரம்பின
இதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு முடிவில், 9 ஆயிரத்து 594 மாணவ-மாணவிகள் தமிழகம் முழுவதும் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து அந்த இடங்களில் சேர்ந்திருக்கின்றனர். முதல் சுற்றில் 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 269 கல்லூரிகளில் ஒரு இடங்களைகூட மாணவர்கள் தேர்வு செய்யவில்லை. 116 கல்லூரிகளில் 10-க்கும் குறைவான இடங்களையும், மற்ற கல்லூரிகளில் இரட்டை இலக்கத்தில் இடங்களையும் தேர்வு செய்து சேர்ந்திருக்கின்றனர்.
இதில் அதிகபட்சமாக எஸ்.எஸ்.என். கல்லூரியில் 87.89 சதவீத இடங்களும், அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாக கல்லூரியில் 86.82 சதவீத இடங்களும், அண்ணா பல்கலைக்கழக குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாக கல்லூரியில் 85.58 சதவீத இடங்களும், காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 83.87 சதவீத இடங்களும் நிரம்பியுள்ளன.
2-வது சுற்று தொடங்கியது
பெரும்பாலும் மாணவ-மாணவிகள் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர்.
2-வது சுற்று கலந்தாய்வு நேற்று காலையில் இருந்து தொடங்கி இருக்கிறது. இதற்கு சுமார் 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.