தமிழகத்தில் மேலும் 3 கோவில்களில் முழுநேர அன்னதான திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
|தமிழகத்தில் மேலும் 3 கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் முழுநேர அன்னதான திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருவரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ழுழுநேர அன்னதான திட்டம் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேலும் 3 கோவில்களில முழுநேர அன்னதான திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக, ராமேசுவரம் ராமநாதசாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் போன்ற கோவில்களில் முழுநேர அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகம் மற்றும் ஆணையர் குமரகுருபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.