பீகார் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
|பீகார் முதல் மந்திரியாக மீண்டும் பதவியேற்றுள்ள நிதிஷ்குமாருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது. இதனால் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்த நிலையில், பீகார் மாநில முதல் மந்திரியாக 8-வது முறையாக பதவியேற்று கொண்டார் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார்.
பாட்னாவில் ராஜ்பவனில் நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பகு சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கொண்ட கூட்டணியின் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகார் மாநில துணை முதல் மந்திரியாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் பீகார் மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் மற்றும் துணை முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு தமிழக முதல் மந்திரி மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பீகார் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார் மற்றும் துணை முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள என்னுடைய சகோதரர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
பீகாரில் மகா கூட்டணி திரும்புவது நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்கான சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சியாகும்" என்று கூறியுள்ளார்.