சென்னை
3 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து 254 பயணிகளுடன் முதல் ஹஜ் விமானம் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்
|3 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து 254 பயணிகளுடன் முதல் ஹஜ் விமானம் சவுதிஅரேபியா புறப்பட்டு சென்றது. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை வழியனுப்பி வைத்தார்.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணம் கருதப்படுகிறது. இந்த கடமையை நிறைவேற்ற முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் புனித பயணம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த ஆண்டு தமிழக ஹஜ் பயணிகள் சென்னையில் இருந்து செல்ல முடியாததால் கொச்சியில் இருந்து சென்றனர்.
3 ஆண்டுகளுக்கு பின் புனித ஹஜ் பயணத்திற்காக முதல் ஹஜ் விமானம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியா ஜித்தா நகருக்கு 128 பெண்கள் உள்பட 254 பேருடன் புறப்பட்டு சென்றது. 2-வது விமானத்தில் 150 பேர் புறப்பட்டனர்.
புனித பயணம் செல்பவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார், ஹஜ் கமிட்டி செயலாளர் முகமது நசிமுத்தீன், விமான நிலைய இயக்குனர் தீபக் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
சென்னையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 954 உள்பட 4 ஆயிரத்து 161 பேர் 19 விமானங்களில் புனித பயணம் செல்கின்றனர். நேற்று ஒரே நாளில் 404 பேர் புறப்பட்டு சென்றனர்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், புனித ஹஜ் பயணத்திற்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கி முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். மேலும் அவரிடம் நீங்கள் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளாரே என கேட்டதற்கு, எங்கள் மடியில் கனம் இல்லை. வழியில் பயம் இல்லை. நான் குற்ற சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்திருந்தால் 1986-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மக்கள் என்னை ஆதரித்து இருக்க மாட்டார்கள் என்றும், எங்கள் மாவட்டத்தை பொறுத்தவரை கள்ளச்சாரயம் காய்ச்சும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.