< Back
மாநில செய்திகள்
தேனிக்கு 21 பெட்டிகளுடன் முதல் சரக்கு ரெயில் வருகை
தேனி
மாநில செய்திகள்

தேனிக்கு 21 பெட்டிகளுடன் முதல் சரக்கு ரெயில் வருகை

தினத்தந்தி
|
22 Oct 2023 2:45 AM IST

அகல ரெயில் பாதை அமைத்த பிறகு தேனிக்கு 21 பெட்டிகளுடன் முதல் சரக்கு ரெயில் நேற்று இரவு வந்தது.

அகல ரெயில் பாதை அமைத்த பிறகு தேனிக்கு 21 பெட்டிகளுடன் முதல் சரக்கு ரெயில் நேற்று இரவு வந்தது.

ரெயில் சேவை

போடி-மதுரை இடையே ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் விளையும் காபி, ஏலக்காய், தேயிலை, பருத்தி, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற விளை பயிர்களை கொண்டு செல்வதற்கு இந்த ரெயில் சேவையை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். பின்னர் மாவட்டத்தில் உருவான தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கும், சரக்கு போக்குவரத்து சேவைக்கும் இந்த ரெயில் பாதை மிகுந்த பயன் அளித்தது.

மீட்டர் கேஜ் ரெயில்பாதையாக இருந்த இந்த சேவையை அகல ரெயில்பாதையாக மாற்ற திட்டமிட்டு கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 11 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு மே மாதம் இறுதியில் மதுரை-தேனி இடையே ரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போடிக்கும் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

சரக்கு ரெயில்

மேலும், சரக்கு போக்குவரத்து சேவைக்காக மதுரை கோட்டத்தின் 19-வது சரக்கு முனையம் தேனி ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டது. அங்கு சரக்கு அலுவலக ரெயில் பாதை அருகே சரக்குகளை கையாள 650 மீட்டர் நீளமும், 16.20 மீட்டர் அகலமும் கொண்ட கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மழைக்காலங்களிலும் தங்கு தடை இன்றி சரக்குகளை கையாள முடியும். இங்கு ஒரே நேரத்தில் 42 சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை கையாள முடியும். இங்கு சரக்கு போக்குவரத்து வசதி கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து தேனிக்கு முதல் சரக்கு ரெயில் நேற்று வந்தது. தெலுங்கானா மாநிலம் சுல்தானாபாத் பகுதியில் இருந்து 1,300 டன் ரேஷன் அரிசிகளை ஏற்றுக்கொண்டு 21 பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரெயில் தேனி ரெயில் நிலையத்துக்கு நேற்று இரவு 7.30 மணியளவில் வந்தது. அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் மாவட்டத்தில் உள்ள 5 உணவுப்பொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைக்கப்படவுள்ளது. அகல ரெயில்பாதை அமைக்கப்பட்ட பிறகு வந்த முதல் சரக்கு ரெயிலை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

மேலும் செய்திகள்