உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் தங்க பதக்கம்; நீரஜ் சோப்ராவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
|உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
சென்னை,
அங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 போட்டி தொடர் நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
அவர் போட்டியின் முடிவில், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தனக்கான மற்றும் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
அவர் எக்சில் (முன்பு டுவிட்டர்) வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். வரலாறு படைத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பாராட்டியுள்ளார்.
மேலும், உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் மகத்தான சாதனை மூலம் இந்திய விளையாட்டு உலகளவில் அங்கீகாரம் பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.