பெரம்பலூர்
முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
|முதல் தலைமுறை தொழில்முனைவோர் தொழில் தொடங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் படித்த வேலையற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்கவும், தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும் பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் செயல்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்கிட இந்த திட்டத்தின் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவினர் 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு 21 முதல் 45 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோருக்கு 10 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இணையதளத்தில் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தாசில்தாரால் வழங்கப்பட்ட இருப்பிட சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 8925533976, 8925533977 என்ற செல்போன் எண்களிலோ அல்லது பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அணுகலாம், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.