திருச்சி அருகே ரவுடி மீது துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
|ரவுடி அலெக்ஸை பிடிக்க தொட்டியம் காவல்நிலைய ஆய்வாளர் முத்தையன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி அலெக்ஸ் என்கிற அலெக்ஸ்சாண்டர் சாம்சன், சாலப்பட்டி தலைமலை அடிவாரத்தில் துப்பாக்கியுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரவுடி அலெக்ஸை பிடிக்க தொட்டியம் காவல்நிலைய ஆய்வாளர் முத்தையன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அப்போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய ரவுடி மீது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் முத்தையன் துப்பாக்கிசூடு நடத்தினார். கால் முட்டியில் காயமடைந்த ரவுடி சுருண்டு விழுந்தார். காயமடைந்த ரவுடி அலெக்ஸ் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார் சுற்றிவளைத்தபோது ரவுடி கல்லால் தாக்கியதில் காவலர் ராஜேஷ் காயமடைந்தார். சம்பவ இடத்தில் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.